யாழ்ப்பாணப் பத்திரிகைகள் 1841-1900: மேலதிக ஆய்வுகளுக்கான குறிப்புக்கள்

1841 முதல் 1900 வரையான 60 ஆண்டுகளில் ஆகக் குறைந்தது 14 பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றினை விட வேறு பத்திரிகைகள் குறுகிய காலம் வெளியாகி மறைந்திருக்கலாம். இந்தப் 14 பத்திரிகைகளில் வித்தியாதர்ப்பணம், யாப்னா பிறிமன், யாழ்ப்பாணச் செய்திகள், வைத்திய விசாரிணி ஆகிய நான்கும் மிகக் குறுகிய காலமே வெளியாகின. உதயதாரகை, பாதுகாவலன், இந்து சாதனம் ஆகிய 3 பத்திரிகைகள் தத்தம் சமய நிறுவனங்கள் சார்ந்து நூறு ஆண்டுகளைத் தாண்டி வெளிவந்தன. இலங்காபிமானி 70 ஆண்டுகளும் சன்மார்க்கபோதினி 40 ஆண்டுகளைத் தாண்டியும் வெளியாகியுள்ளன. பாலியர் நேசன், இலங்கை நேசன், விஞ்ஞானவர்த்தினி, உதயபானு, சைவாபிமானி ஆகிய ஐந்தும் சில ஆண்டுகள் வெளியாகி மறைந்தன.

வித்தியாதர்ப்பணம், யாழ்ப்பாணச் செய்திகள், வைத்திய விசாரிணி ஆகிய 3 பத்திரிகைகளின் ஒரு பிரதிதானும் இப்பொழுது கிடைப்பதில்லை. யாப்னா பிறிமனின் ஒரேயொரு இதழ் அமெரிக்க காங்கிரசு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஏனைய 10 பத்திரிகைகளின் சிறிய எண்ணிக்கையிலான பிரதிகள் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. அத் திணைக்களத்தில் தமிழ் மொழி தெரிந்த ஊழியர்கள் எவரும் இல்லை என்பதால் அவற்றினைப் பெற்று ஆராய்வது மிகுந்த சிரமமானது. இவை தொடர்ந்து அழிவடைந்தும் வருகின்றன.

உதயதாரகை, இந்து சாதனம் ஆகியவற்றின் நுண்படச் சுருள்களின் ஒரு தொகுதி யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் கிடைக்கின்றன. கத்தோலிக்கப் பாதுகாவலன், உதயதாரகை, இந்து சாதனம் ஆகியவற்றின் சிறிய எண்ணிக்கையான பிரதிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலும் உள்ளன. யாழ்ப்பாணக் கல்லூரி நூலகத்தில் சில உதயதாரகை இதழ்களைப் பார்வையிட முடிகிறது. உதயதாரகையின் முதலாவது ஆண்டுத் தொகுப்பு கூகிள் நூல்கள் வலைத்தளத்தில் கிடைக்கிறது. நூலகம் வலைத்தளத்திலும் (www.noolaham.org) சிறிய எண்ணிக்கையில் உதயதாரகை, கத்தோலிக்கப் பாதுகாவலன் ஆகியவற்றின் பத்தொன்பதாம் நூற்றாண்டு இதழ்கள் உள்ளன.

எஞ்சிய இதழ்களின் முக்கிய கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாக்குவதும் அவற்றின் அடிப்படையில் அக்கால சமய, சமூக, பண்பாட்டுச் சூழல்களை ஆராய்வதும் நாம் அவசியம் முன்னெடுக்க வேண்டிய பணிகளாக உள்ளன.