1901-1930 கால யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பணியாற்றிய எஸ். கதிரேசு என்பவரால் எழுதப்பட்டு 1905 இல் வெளியான A Handbook to the Jaffna Peninsula and a Souvenir of the opening of the Raiulway to the North என்ற நூலில் அக்காலத்தில் வெளியாகிக் கொண்டிருந்த பத்திரிகைகள் தொடர்பான சிறு அத்தியாயம் ஒன்று காணப்படுகிறது. வைமன் கதிரவேற்பிள்ளைக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டு வெளியாகிய இந்த நூல் தெல்லிப்பழை அமெரிக்கன் மிசன் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டிருந்தது.

கதிரேசுவின் குறிப்புக்களின் படி 1905 அளவில் நான்கு வாரப் பத்திரிகைகள், மூன்று இருவாரப் பத்திரிகைகள், ஒரு மாதப் பத்திரிகை என எட்டுப் பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் வெளியாகிக் கொண்டிருந்தன. 1841 இல் இருவார இதழாக வெளியாகத் தொடங்கிய உதயதாரகை வார இதழாக மாறியிருந்தது. அமெரிக்க, வெஸ்லிய மிசன்களின் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் தெல்லிப்பளையில் அச்சிடப்பட்டு வெளியான உதயதாரகையின் வெளியீட்டாளராக ரி. எஸ். கூக் (T. S, Cooke) என்பவர் இருந்தார். உதயதாரகையைப் போலவே இலங்காபிமானியும் ஆங்கிலம், தமிழ் இருமொழிகளையும் தாங்கிய வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. அதன் உரிமையாளரும் முகாமையாளரும் ஆசிரியருமாக எச். எவ். யோன்பிள்ளை (H. F. Johnpulle) என்பவர் இருந்தார்.

1876 இல் உரோமன் கத்தோலிக்கர் சார்பாகத் தொடங்கப்பட்ட யாழ்ப்பாணக் கத்தோலிக்க பாதுகாவலன் 1905 இல் ஆங்கிலத்தில் வார இதழாகவும் தமிழில் இருவார இதழாகவும் வெளியாகிக் கொண்டிருந்தது. ஆங்கிலப் பதிப்புக்கு ஜே. எச். மார்ட்டினும் (J. H. Martyn) தமிழ்ப் பதிப்புக்கு தம்புவும் (F. Tamboo) ஆசிரியர்களாக இருந்தனர். குரூசோல்ற் (Rev. Groussault) இதன் முகாமை யாளராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார். தம்பிமுத்துப் புலவரால் 1884 இல் தொடங்கப்பட்ட சன்மார்க்கபோதினி தொடர்ந்தும் அச்சுவேலியிலிருந்து மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்தது.

சைவ பரிபாலன சபையினரால் 1889 இல் இருமொழிப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்ட இந்து சாதனமும் 1905 அளவில் தனித்தனிப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. வாரந்தோறும் வெளியான ஆங்கிலப் பதிப்புக்கு (Hindu Organ) ஏ. சபாபதியும் இருவார இதழான தமிழ்ப் பதிப்புக்குப் பி. கார்த்திகேசனும் ஆசிரியர்களாக இருந்தனர். 1901 இல் இருவார இதழாகத் தொடங்கப்பட்ட சுதேச நாட்டியமும் 1905 இல் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. வசாவிளானில் அச்சிடப்பட்ட சுதேச நாட்டியத்தின் ஆசிரியராகவும் முகாமையாளராகவும் வெளீட்டாளராகவும் கல்லடி வேலுப்பிள்ளை இருந்தார்.

சுதேசநாட்டியம் பத்திரிகை ஆசிரியரான கல்லடி வேலுப்பிள்ளை எழுதி 1917 இல் வெளியிட்ட யாழ்ப்பாண வைப கௌமுதியில் 1902 இன் பின்னர் தோன்றி மறைந்த பத்திரிகைகள் பற்றிய பின்வரும் குறிப்பு உள்ளது. ”குரு சந்திரோதயம், கலியுகவரதன், சண்முகநாதன், ஆத்துமபோதினி, இந்துபாலபோதினி, சைவபாலியசம்போதினி, சைவசூக்குமார்த்தபோதினி, ஞானப் பிரகாசம், ஞானசித்தி, பாலபாஸ்கரன், விஜயலட்சுமி, லங்கா முதலிய பத்திரங்கள் தோன்றி மறைந்தன”. (பக்கம் 327)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் முதுநிலை விரிவுரையாளரான சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் எழுதி 2016 இல் வெளியிட்ட ”யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் (1900-1915)” என்ற நூல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியான பத்திரிகைகள் தொடர்பான பல தகவல்களைக் கொண்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியான பத்திரிகைகளில் விவேகானந்தன், சுதேச நாட்டியம், திராவிட கோகிலம், விஜயபானு, குருசந்திரோதயம், சைவ சூக்குமார்த்த போதினி, விஜயலட்சுமி, மகா விஜயலட்சுமி, விஞ்ஞான வர்த்தினி, ஆத்மபோதினி, சண்முகநாதன், பாலபாஸ்கரன் ஆகிய பத்திரிகைகளின் சில பிரதிகளை நேரில் பார்த்து ஆராய்ந்ததாகக் குறிப்பிடும் சோமேசசுந்தரி அந்தப் பத்திரிகைகளின் முகப்புப் பக்கங்கள் ஒவ்வொன்றைத் தனது நூலில் இணைத்து உறுதிப்படுத்தியுள்ளார். இவற்றுடன் அக்காலப்பகுதியில் வெளியான இந்துபால போதினியின் முகப்புப் பக்கமொன்றும் அந்நூலில் உள்ளது.

1901-1930 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் தொடங்கிய பத்திரிகைகளின் பட்டியல் வருமாறு:

 • 1902 சுதேசநாட்டியம்
 • 1902விவேகானந்தன்
 • 1907ஆத்மபோதினி
 • 1908 சைவசூக்குமார்த்த போதினி –
 • 1908 ஞானசித்தி
 • 1908 குருசந்திரோதயம்
 • 1908 இந்துபாலபோதினி
 • 1910 விஜய லட்சுமி
 • 1910 சைவ பாலிய சம்போதினி
 • 1911 விஜயபானு,
 • 1911 மகா விஜயலட்சுமி,
 • 1911 கலியுகவரதன்
 • 1911 சண்முகநாதன்
 • 1912 விச்சுவகர்மன்
 • 1915 பாலபாஸ்கரன்
 • 1923 தேசாபிமானி
 • 1924 சைவ சித்தாந்த பானு
 • 1925 கத்தோலிக்க தூதன்
 • 1925 மேல் நோக்கம்
 • 1925 தமிழர் போதினி
 • 1927 கலிகால தீபம்
 • 1927 திராவிடன்
 • 1927 சோதிட பிரபாலினி
 • 1930 பஞ்ச சக்தி
 • 1930 ஈழகேசரி
 • 1930 ஜனதர்மபோதினி
 • 1930 தமிழன்
 • 1930 லங்கா