ஈழமுரசு

1980 கள் யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்த காலப்பகுதியாகும். இனப்பிரச்சினை கொழுந்துவிட்டெரியத் தொடங்கிய இக்காலப்பகுதி பல்வேறு பத்திரிகைகளின் தேவையை ஊக்குவித்தது எனலாம்.

”ஏதோ ஒரு வகையில் அரச கையேடுகளாகவே பிரதிபலித்து வெளிவந்த கொழும்புப் பத்திரிகைகள் புறக்கணிக்கப்பட வேண்டியன என்ற கருத்து மக்களிடையே அன்று வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த மனோநிலை” ஈழமுரசு தொடங்கக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 1984 இல் ஈழமுரசும் 1986 இல் உதயனும் 1987 இல் முரசொலியும் வெளியாகத் தொடங்கின.

1984 பெப்ரவரி 5 ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு வார இதழாக ஈழமுரசு தொடங்கப்பட்டது. இதன் உரிமையாளர் மயில். அமிர்தலிங்கம் ஆவார். கே. எஸ். அருமைரத்தினம் என்பவர் பொது முகாமையாளராக இருந்தார்.

”இத்தகைய ஒரு சூழ்நிலையில் செய்தித் துறையும் தணிக்கை, ஊரடங்கு போன்ற அரச விலங்குகளால் எத்தனையோ இன்னல்களை எதிர்நோக்கி முடங்கிக் கிடந்தது. ஆனால் தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டிய செய்திகள் தமிழ் நிலத்தில் ஊரடங்கு வேளையிலேயே நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆகவே அவர்களில்ன் செய்திகளை அறியும் வேட்கைக்கு ஒரு பத்திரிகை மட்டும் போதாது; இன்னொரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும்” என்ற விருப்பத்தின் அடிப்படையில் ம. அமிர்தலிங்கம் ஈழமுரசு பத்திரிகையை ஆரம்பித்தார்.

ஈழமுரசு வார இதழாகத் தொடங்கப்பட்டபோதும் விற்பனை சரிவர அமைந்தால் நாளிதழாக்குவதாகவே திட்டமிடப் பட்டிருந்தது. அவ்வகையில் 1984 ஏப்ரல் 18 புதன்கிழமை இதழுடன் வாரமிருமுறை இதழாக மாறியது. 1984 செப்ரெம்பர் 10 ஆம் திகதியில் தினசரி வெளிவரத் தொடங்கியது. அவ்வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய மூன்றாவது தினசரி ஈழமுரசு ஆகும். 1984 டிசம்பரில் ஈழமுரசு விற்பனை 10,000 இனைக் கடந்தது என்றும் 1986 அளவில் 16,000 பிரதிகள் விற்பனையானதாகவும் ஈழமுரசின் இரண்டாவது ஆண்டுமலரில் குறிப்பிட்டுள்ளனர்.

1984 ஒக்ரோபரிலேயே ஈழமுரசு தனக்கான அச்சுக் கருவிகளை வாங்கிக் கொண்டது. அதுவரை காலமும் சண்முகா பதிப்பகத்தில் அச்சுக் கோர்த்து வேறு அச்சகங்களில் கொடுத்து அச்சிட்டே பெற்றிருந்தனர். அவ்வகையில் கலைவாணி அச்சகம், பஸ்தியன் அச்சகம், சாந்தி அச்சகம், சண்முகநாதன் அச்சகம் போன்றவை ஈழமுரசின் வருகைக்கு உதவியுள்ளனர்.

ஈழமுரசு ஆரம்பிக்கப்பட்டபோது செய்திகள் சார்ந்த ஆலோசனைகளை வழங்கிவந்த எஸ். திருச்செல்வம் பின்னர் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றார். திருச்செல்வம் தினகரன், ஈழநாடு பத்திரிகைகளில் பணியாற்றியிருந்தவர். இவர் ஈழமுரசு தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ஆசிரியராக இருந்தார் எனவும் தனிப்பட்ட தேவைகருதி ஆலோசகர் என அடையாளப்படுத்தப்பட்டார் என்ற கருத்தும் உள்ளது. ஈழமுரசின் இலக்கியப் பக்கங்களுக்கு எழுத்தாளர் சொக்கன் (க. சொக்கலிங்கம்) ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.

1986 இன் இறுதியில் ஈழமுரசு விடுதலைப் புலிகளின் செல்வாக்கு உட்பட்ட பத்திரிகையாகக் கருதப்பட்டது. 1987 ஒக்ரோபரில் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடவடிக்கை களைத் தொடங்கியபோது ஈழமுரசு, முரசொலி பத்திரிகை அலுவலகங்களை முற்றுகையிட்டுப் பத்திரிகையாளர்கள், ஊழியர்களைக் கைது செய்தபின் அலுவலகங்கள் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டன.

1989 இல் இந்திய இராணுவத்தின் அழுத்தம் காரணமாக மீண்டும் ஈழமுரசினை ஆரம்பிக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையின்படி முதற்பக்கம் தவிர ஏனைய பக்கங்கள் பல்வேறு அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு ஈழமுரசினை மீளத் தொடங்கும் நிலையில் 1989 பெப்ரவரி முதலாம் திகதி அமிர்தலிங்கம் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அத்துடன் ஈழமுரசின் பயணம் முடிவுக்கு வந்தது.