நூலக வலைத்தளத்தின் நிதிப்பெறுமதி

நூலக வலைத்தளத்தில் (www,noolaham.org) இப்பொழுது ஏறத்தாழ 53,000 ஆவணங்கள் உள்ளன. அச்சுவடிவத்தில் இந்த ஆவணங்களைச் சேகரிக்கக் கிட்டத்தட்ட 50 இலட்சம் செலவாகும் எனவும் அவற்றைக் கொண்டு ஓர் நூலகமொன்றினை உருவாக்கக் கட்டிடச் செலவுகள் தவிர்த்து மொத்தம் ஒரு கோடி ரூபா ஆகும் எனக் கணக்கிட முடிகிறது. விபரம் வருமாறு

  எண்ணிக்கை பெறுமதி மொத்தம் அலுமாரிகள்
நூல்கள் 6,650 300 1,995,000 11
இதழ்கள் 10,100 100 1,010,000 8
பத்திரிகைகள் 33,900 20 678,000 17
பிரசுரங்கள் 1,550 100 155,000 2
மலர்கள் 800 300 240,000 2
மொத்தம் 53,000   4,078,000 40

 

நூல்கள், மலர்கள் ஒவ்வொன்றும் 300 ரூபா என்றும் சஞ்சிகைகள், பிரசுரங்கள் ஒவ்வொன்றும் 100 ரூபா என்றும் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் 20 ரூபா என்றும் எடுக்கப்பட்டுக் கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 53,000 ஆவணங்களை அச்சுவடிவத்தில் விலை கொடுத்து வாங்கிச் சேகரிப்பதற்கு சுமார் 41 இலட்சம் ரூபாய் தேவை என மதிப்பிடப்பட முடிகிறது. இவற்றை அடுக்கி வைக்க 6 அடிக்கு 3 அடி அளவான 40 புத்தக அலுமாரிகள் தேவைப்படும். ஒவ்வொன்றும் 15,000 ரூபா வீதம் அலுமாரிகளின் பெறுமதி குறைந்தது 6 இலட்சம் ரூபா ஆகும். ஒரு நூலகருக்குரிய தளபாடங்கள், கணினி, உபகரணங்களுக்கு மேலும் 3 இலட்சம் தேவைப்படும். அவ்வகையில் நூலக வலைத்தளத்துக்குச் சமனான நூலகம் ஒன்றை நிறுவுவதற்குக் கட்டிடச் செலவுகள் தவிர்த்து சுமார் 50 இலட்சம் தேவைப்படும்.

ஒரு நூலகம் என்பது வெறுமனே ஆவணங்களும் தளபாடங்களுமல்ல. என்ன ஆவணங்கள் உள்ளன, அவை எங்கே உள்ளன என்ற விபரத்தரவுகள் நூலகத்தினைப் பயன்படுத்த அத்தியாவசியமானவை. ஒவ்வொரு ஆவணத்துக்குரிய விபரத்தரவினை உள்ளிட 100 ரூபா வீதம் தேவை எனக் கொண்டால் மேலும் 53 இலட்சம் தேவை என்பதும் இங்கே கவனிக்க வேண்டியதாகும். அவ்வகையில் 53,000 ஆவணங்களைச் சேகரித்து ஒரு நூலகமாக ஒழுங்குபடுத்துவதற்கான செலவு ஒரு கோடி ரூபா அல்லது 10 மில்லியன் ரூபா ஆகும்.

அவுஸ்திரேலியாவிலிருந்து கனடா வரை தமிழர்கள் பரந்துள்ள 100 க்கும் அதிகமான நாடுகளிலிருந்து நூலக வலைத்தளங்கள் பார்வையிடப்படுகின்றன. அவ்வகையில் நூலக வலைத்தளங்களின் பயன்பாட்டுப் பெறுமதி 100 கோடி ரூபாவிலும் அதிகமாக உள்ளது.

வெளிநாடுகளை விடுத்து இலங்கையின் வடக்குக் கிழக்கின் 8 மாவட்டங்களிலும் மலையகத்திலும் கொழும்பிலுமாக 10 நூலகங்களை நிறுவுவது என்றாலே சுமார் 10 கோடி ரூபாய் தேவைப்படும். இத்தொகை 2005 முதல் இன்று வரை நூலக நிறுவனம் செலவழித்த தொகையினை விட மிக அதிகமாகும். அத்துடன் இத்தகைய 10 நூலகங்களை ஒவ்வோர் ஊழியருடன் பராமரிப்பதற்குத் தேவையான செலவினை விட நூலக நிறுவனத்தின் பராமரிப்புச் செலவு குறைவாகவே உள்ளது என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும்.

53,000 ஆவணங்களுடன் உள்ள ஒரு நூலகத்தினை ஒரு நூலகர் (மாதம் 40,000 சம்பளம்), ஓர் உதவியாளர் (மாதம் 25,000 சம்பளம்), சிறு கட்டிடம் (மாதம் 10,000 வாடகை), மிகக்குறைவான ஏனைய செலவுகளுடன் (மின்சாரம், தொலைபேசி, இணைய இணைப்பு, காகிதாதிகளுக்கு மாதம் 15,000) பராமரிக்க முடியும் எனக் கொண்டால் ஓர் ஆண்டுக்கு 11 இலட்சம் ரூபா தேவைப்படும். இலங்கையெங்கும் மொத்தம் 10 நூலகங்கள் அமைக்கப்பட்டால் 110 இலட்சம் ரூபா தேவையாக உள்ளது. இத்தொகை நூலக நிறுவனத்தினை ஓராண்டு நிர்வகிக்கத் தேவையான 52 இலட்சத்தினை விட இருமடங்கிலும் அதிகமாகும்.

52 இலட்சம் ரூபா செலவில் நூலக நிறுவனம் வெறுமனே 53,000 ஆவணங்களைப் பராமரித்துக் கொண்டிருக்கவில்லை. அரை மணித்தியாலத்துக்கு ஓர் ஆவணம் வீதம் தொடர்ந்து இணைத்துக் கொண்டே செல்கிறது என்பதனையும் எண்ணிமப் பாதுகாப்பு, பல்லூடக ஆவணகம், வாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம், பள்ளிக்கூடம், ஏட்டுச்சுவடிகள் ஆவணமாக்கம் எனப் பல செயற்றிட்டங்களை முன்னெடுக்கிறது என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும்.