இரத்தினஜீவன் ஹூலும் நாவலரும்

தேசம்நெற் இணைய இதழில் இன்று (2018-03-11) இரத்தினஜீவன் ஹூல் எழுதிய ”தேசிய முத்திரை கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் எம் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகளா?” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. (http://thesamnet.co.uk/?p=93188) அக்கட்டுரையில் பின்வருமாறு உள்ளது.

“25-11-1847 ம் திகதியிட்ட உதயதாரகைப் பத்திரிகையின்படி கலாநிதி. பீட்ட பேசிவல் பாதிரியின் தலைமையில் இயங்கிய வெஸ்லியன் செமினரிக்கு – இன்றைய மத்திய கல்லூரிக்கு – கேப்ரியல் ஜெரோனி என்னும் நளவர் குலத்தைச் சார்ந்த கெட்டிக்கார மாணவன் அனுமதிக்கப்பட்ட போது அங்கு மாணவனாயிருந்த நாவலர் தலைமையில் அரைவாசி மாணவர்கள் அப்பாடசாலையை விட்டு வெளியேறினர். ஆனால் நாவலர் அவர்களுக்குத் தொடங்கிய பாடசாலையின் தரக் குறைவு காரணமாக மாணவர்கள் திரும்பி வந்தனர்.”

இதனை வாசிக்கும் ஒருவர் “ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனுடன் சேர்ந்து கற்கவிரும்பாத நாவலர் அவருடன் கற்ற அரைவாசி மாணவரையும் சேர்த்துக் கொண்டு கல்லூரியிலிருந்து வெளியேறினார்” என்பதாகவே விளங்கிக் கொள்வார். நாவலர் பிறந்தது 1822 இல். 1841 அளவில் அவர் கல்வியினை முடித்து விட்டார். 1841-48 காலத்தில் அவர் மத்திய கல்லூரியில் ஆசிரியராக இருந்துள்ளார். நாவலரைபற்றித் தனது பல ஆய்வுகளில் எழுதிய இரத்தினஜீவன் இத்தகவல்களை அறியாதிருக்க வாய்ப்பில்லை.

நாவலர் தொடர்பில் தகவல்களைச் சற்று அங்குமிங்குமாக மாற்றித் தவறாகப் பொருள்பட இரத்தினஜீவன் எழுதுவது இது முதல்முறையல்ல. ”தமிழ் மறுமலர்ச்சியாளர் சி. வை. தாமோதரம்பிள்ளை” என்ற நூலில் (2013) பின்வருமாறு குறிப்பிடுகிறார். (பக்கம் 80-81)

”சட்டசபைத் தேர்தலில் சேர். பொன் இராமநாதன் பிரிட்டோவை எதிர்த்து நின்றபோது வெள்ளாளர் அல்லாத சாதியினர்க்கு சமபந்தி, பாடசாலைகளில் சம இடம் ஆகியவற்றை எதிர்த்தவரும், தாழ்த்தப்பட்ட சாதியினர்க்கு கல்வி புகட்டக் கூடாதென்றும் அப்படி அவர்கள் கல்வி புகட்டப்பட்டால் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்துவிடும் என்பதால் அதை எதிர்த்தவருமான பொன். இராமநாதனுக்கே நாவலர் ஆதரவு வழங்கினார்”

நாவலர் பிரிட்டோவை எதிர்த்து இராமநாதனுக்கு ஆதரவு வழங்கியது 1879 இல். நாவலர் அதே ஆண்டில் இறந்தும் விட்டார். இராமநாதன் சம ஆசனம், சம போசனத்துக்கு எதிராகச் செயற்பட்டது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளின் பின்னர். (இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். 2007. பக். 98-99) இராமநாதன் எதிர்ப்புத் தெரிவித்த இடமாகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அடிக்குறிப்பில் இரத்தினஜீவன் குறிப்பிடுகிறார். இவ்வெதிர்ப்பு முன்வைக்கப்பட்டது 1929இல்.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இராமநாதன் செய்யப்போகும் காரியங்களுக்கு நாவலர் எப்படிப் பொறுப்பாக முடியும்?

நாவலர் சாதிஒடுக்குமுறைக்கு ஆதரவாகச் செயற்பட்டார் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அதனை நிறுவுவதற்குப் போதிய ஆதாரங்கள் நாவலர் எழுத்துக்களிலும் செயற்பாடுகளிலும் உள்ளன. அவற்றைவிடுத்துத் தகவல்களை முன்பின்னாக மாற்றி எழுத வேண்டியதில்லை. இதனால் இரத்னஜீவன் ஹூலின் சமூக அறிவியல் சார் ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தினதும் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுவருகிறது.

ஒருபுறம் எல்லாத் தீமைக்கும் நாவலரையே காரணங் காட்டுவதாக இத்தகைய முயற்சிகள் உள்ளன என்றால் மறுபுறம் எல்லா முக்கிய செயற்பாடுகளையும் நாவலரே செய்தார் எனப் புனையும் போக்கும் முன்னெடுக்கப்படுகிறது. இரண்டுமே ஆய்வுநேர்மையற்ற செயற்பாடுகள்.