வாய்மொழி வரலாறு: மிகச் சுருக்கமான அறிமுகம்

நூலக நிறுவனம் போன்ற பல தளங்களிலான விரிவான ஆவணமாக்க நோக்கங்களுடன் செயற்படும் நிறுவனங்கள் தமது ஆவணப்படுத்தற் செயற்பாடுகளின் போது நாளாந்தம் எதிர்கொள்ளும் கேள்வி எவற்றினை முதலில் ஆவணப் படுத்துவது என்பதாகும். எல்லாவற்றினையும் உடனடியாக ஆவணப்படுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஒரு நிறுவனத்துக்குக் கிடைக்கும் வளங்களின் அளவே அந்த நிறுவனம் முன்னெடுக்கக்கூடிய ஆவணப்படுத்தலின் அளவைத் தீர்மானிக்கின்றது. ஆவணப் படுத்தத் தவறும் ஆவணங்கள் எக்காலத்திலும் கிடைக்காத வையாக அழிந்து போகலாம் என்பதால் எவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது முக்கிய ஆய்வுச் சிக்கல் ஆகிறது.

ஆனால் ஆவணமாக்கமானது எதிர்கொள்ளும் ஆகப்பெரிய சவால் இதுவல்ல. ஆவணங்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளவை எமது சமூக அறிவின், அனுபவத்தின், வரலாற்றின் மிகச்சிறு பகுதியே. மிகப்பெரும் பகுதி எந்தவகையிலும் ஆவணங்களாகப் பதிவுசெய்யப்படுவதில்லை. எவ்வகையிலும் பதிவுசெய்யப் படாமல் அழிந்து போகும் அறிவுத் தொகுதிகளை எப்படிப் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் நாம் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது.

ஒரு முதியவர் இறக்கும்போது ஒரு நூலகம் எரிந்து சாம்பலாகிறது என்கிறது ஓர் ஆபிரிக்கப் பழமொழி. ஒவ்வொரு மனிதரிலும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் பொதிந்துள்ளன. மொழி, சமூக, பண்பாட்டுக் கூறுகளும் அறிவுத் தொகுதிகளும் ஒவ்வொரு மனிதராலும் காவப்படுகின்றன. ஆனால் அவர்களின் வாழ்க்கை முடியும்போது அவையனைத்தும் சேர்ந்தே அழிந்துபோகின்றன.

நூல்களாகவோ பிற ஆவணங்களாகவோ தம் வாழ்வ னுபவங்களைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் மிகச் சிலருக்கே கிடைக்கின்றன. எழுத்தில் பதிவு செய்வதற்கான சூழ்நிலை, மொழியறிவு, பொருளாதாரச் சாத்தியங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அவையனைத்தும் வாய்த்தால் கூட அத்தகைய பதிவுகளின் தேவை உணரப்படுவதில்லை; ஆர்வமிருப்பதில்லை.

இத்தகைய அனுபவங்களைப் பதிவுசெய்யும் ஓர் ஆவணப்பதிவு முறையே வாய்மொழி வரலாறு ஆகும். ஒலிப்பதிவு மூலம் மனிதர்களின் கதைகளையும் அனுபவங்களையும் அறிவையும் வரலாற்றையும் வாய்மொழி வரலாறுகள் பதிவு செய்கின்றன.

வாய்மொழி வரலாறு

வாய்மொழி வரலாறு (Oral History) என்பது அதன் பெயர் குறிப்பிடுவது போல வாய்வழியாகப் பதிவுசெய்யப்படும் வரலாறு ஆகும். முறையாகத் திட்டமிடப்பட்ட நேர்காணல் மூலம் மனிதர்களது வாழ்வு அனுபவங்களையும் அறிவினையும் ஒலிப்பதிவுசெய்து கொள்வது வாய்வழி வரலாற்றுப் பதிவு ஆகிறது. வாய்மொழி மூலம் சொல்லப்படுபவற்றைப் பதிவு செய்து கொள்ளும் செயல்முறை, அவ்வாறு செய்யப்பட்ட பதிவு (ஒலி, காணொளி) ஆகிய இரண்டுமே வாய்மொழி வரலாறு என்றே குறிப்பிடப்படுகின்றன.

தகவல்களை வாய்வழிமூலம் பெற்று வரலாறு எழுதுதலில் பயன்படுத்தும் வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்பாகவே ஆரம்பமாகிவிட்டது. இற்றைக்கு 3,000 ஆண்டுகளின் முன்னரேயே சீனாவில் வரலாறு எழுதுதலில் ஆட்களின் கூறியவற்றைப் பதிவுசெய்து பயன்படுத்தும் முறை ஆரம்பமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் நடந்த பெலொபனிசியன் சண்டை பற்றி எழுதிய ஏதென்சினைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் தொசிடிடெசு அச்சண்டையுடன் தொடர்பானோரை நேர்காணல் செய்து தகவல்களைச் சேகரித்தார் எனப்படுகிறது.

வரலாறு எழுதுதலில் வாய்வழித் தகவல்களின் பயன்பாடு பன்னெடுங்காலத்துக்கு முன்னரேயே ஆரம்பமான போதும் அத்தகைய தகவல் திரட்டும் முறை பரவலான பயன்பாட்டுக்கு வந்தது 1940களியே ஆகும். இதற்கான முக்கிய காரணம் நேர்காணல்களைப் ஒலிப்பதிவு செய்யக்கூடிய கருவிகளின் வருகையே ஆகும்.

வாய்மொழி வரலாறு சில சமயங்களில் வாய்மொழி வழக்காறு (Oral Tradition) எனத் தவறாக விளங்கிக் கொள்ளப்படுவதுண்டு. வாய்மொழி வழக்காறு என்பது மனிதர்கள் தம் முன்னோர்களிடமிருந்து வாய்மொழி மூலம் பெற்றுக் கொள்ளும் கதைகள், பாடல்கள் போன்றவற்றினைக் குறிக்கும். ஆனால் வாய்மொழி வரலாறு என்பது ஒரு குறித்த ஆளுமையின் அனுபவங்களின் பதிவாகவே இருக்கும்.

வாய்மொழி வரலாறுகள் வாய்வழிமூலம் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் வாய்வழி மூலம் திரட்டப்படும் தகவல்கள் எல்லாம் வாய்வழி வரலாறுகள் ஆகாது. அதுபோலவே வாய்மொழி வரலாறுகள் எல்லாம் நேர்காணல்கள் என்றபோதும் நேர்காணல்கள் எல்லாம் வாய்வழி வரலாறுகள் ஆகாது.

வாய்மொழி வரலாறு என்பது ஒரு தகவற் சேகரிப்பு முறையோ நேர்காணல் முறையோ அல்ல; அது ஓர் ஆய்வு முறையும் வரலாற்றுப் பதிவுமுறையும் ஆகும். வாய்வழி வரலாறென ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நேர்காணல்கள் பின்வரும் தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

  • நன்கு திட்டமிட்ட விரிவான நேர்காணல்

  • முறையாக ஒலிப்பதிவு செய்யப்படுதல்

  • அந்த ஒலிப்பதிவுகள் ஆவணகங்களில் ஏனையோரும் பயன்படுத்தக்கூடிய வண்ணம் பாதுகாக்கப்படுதல்.

இவ்வாறு நன்கு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் நேர்காணல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஏனையோரும் பயன் படுத்தக்கூடிய வண்ணம் ஆவணப்படுத்தப்படும் போது அந்த ஒலிப்பதிவுகள் முதல்நிலைத் தகவல் ஆவணங்கள் ஆகின்றன. வரலாறு எழுதுதலிலும் ஏனைய ஆய்வுச் செயற்பாடுகளிலும் பயன்படுத்தக்கூடியவை ஆகின்றன.

வாய்வழி வரலாற்றினை அடிப்படையாக இரு வகைகளாகப் பிரிக்கலாம்

  • வாழ்க்கை வரலாற்றுப் பதிவு

  • குறித்த ஓர் விடயம் சார்ந்த பதிவு

வாழ்க்கை வரலாற்றுப் பதிவு எனும்போது குறித்த ஓர் ஆளுமையின் வாழ்க்கையினை விரிவாகவும் முழுமையாகவும் பதிவு செய்து கொள்ளுதல் ஆகும். விடயம்சார் பதிவுகள் குறித்த விடயப்பரப்புஹ் தொடர்பான ஆய்வுகளை முழுமை செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.

விளிம்புநிலை மனிதரும் சமூகங்களும் பதிவுசெய்யப் படுவதில்லை என்பது ஆவணகங்கள் மீதான ஒரு பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. சில சமயங்களில் இது தெரிந்தே செய்யப்படுவதாக இருந்தாலும் பல சமயங்களில் ஆவணங்கள் எதுவுமே இல்லாமை இந்தத் தகவல் இடைவெளிக்கான முக்கிய காரணமாகிறது. இந்தத் தகவல் இடைவெளிகளை நிரப்பிக் கொள்ள பாரம்பரியமான தகவல் வளங்களைத் தாண்டிப் புதியனவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவ்வகையில் வாய்மொழி வரலாறுகள் எமது சமூகங்களிடையே மேலும் முக்கியமானவையாகின்றன.