ஈழத்துப் பாடசாலைகளின் வரலாறு

கனடாவில் வசிக்கும் முருகேசு பாக்கியநாதன் ஆய்வுசார் எழுத்துப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். இவரது ஒரு முக்கிய நூல் ‘பனையியல்’ என்பதாகும். இவர் கடந்த சில ஆண்டுகளாக இவர் கனடாவின் தாய்வீடு மாத இதழில் ஈழத்துப் பாடசாலைகளின் வரலாற்றை எழுதிவருகிறார். வடக்கிலும் கிழக்கிலுமாக சுமார் 40 பாடசாலைகளின் வரலாறு இவரால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நூற்றாண்டு விழாக் கண்ட பாடசாலைகள் ஆகு. இவற்றில் முதலாவது பாடசாலை 1814 இல் தொடங்கப்பட்டு இருநூறாண்டு கண்ட மெதடிஸ்த மத்திய கல்லூரிஆகும்.

தமிழ்ச் சூழலில் ஆவணமாக்கத்தின் போதாமை திரும்பத் திரும்பக் குறிப்பிடப்படுகின்றபோதும் அது தொடர்பான முயற்சிகள் எடுப்போர் மிகச்சிலரே. அவ்வகையில் முருகேசு பாக்கியநாதனின் இப்பணி பாராட்டுக்குரியதாகும். இப்பாடசாலைகளின் வரலாறுகள் ஊடாக ஈழத்தின் நவீன கல்வி வரலாற்றை மட்டுமல்லாமல் சமூக, பண்பாட்டு, பிரதேச வரலாறுகள் எழுதுவதற்கான தரவுகள் விரிவாகத் திரட்டப்பட்டுள்ளன.

அவற்றினை விரைவில் நூலாக வெளியிடுவதாகவும் மார்ச் 2018 தாய்வீடு இதழில் முருகேசு பாக்கியநாதன் குறிப்பிட்டுள்ளார். ஆவணப்படுத்தப்பட்ட பாடசாலைகளில் 4 மட்டக்களப்புப் பாடசாலைகள், 4 திருகோணமலைப் பாடசாலைகள், 2 வவுனியாவைச் சேர்ந்தவை; மிகுதி 30 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவை ஆகும். அத்துடன் திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை, திருகோணமலை புனித மரியாள் கல்லூரி ஆகியன தொடர்பில் போதிய தகவல் கிடைக்காதமையால் கட்டுரைகள் எழுதப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நூற்றாண்டு கண்ட பாடசாலைகள் தொடர்பில் நூலகச் சேகரங்களில் தேடிய போது இன்னும் 13 பாடசாலைகளின் விபரம் அறிய முடிந்தது. அவற்றின் விபரம் வருமாறு

 • 1823 யா/ பெரியபுலம் மெ. மி. த. க. வித்தியாசாலை
 • 1848 யா/ வண்ணை நாவலர் வித்தியாலயம்
 • 1860 யா/ மல்லாகம் மகா வித்தியாலயம்
 • 1894 யா/ வல்வெட்டி விநாயகர் வித்தியாலயம் 
 • 1894 யா/ வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி
 • 1903 யா/ நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயம்
 • 1904 புத்/ உடப்பு தமிழ் மகா வித்தியாலயம்
 • 1904 யா/ மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை
 • 1905 யா/ நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை
 • 1910 யா/ மயிலணி சைவ மகா வித்தியாலயம்
 • 1910 யா/ நவாலி மகா வித்தியாலயம்
 • 1913 யா/ கோப்பாய் மகா வித்தியாலயம்
 • 1915 யா/ உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்

இவற்றைவிட விடுபட்ட வேறு பாடசாலைகளின் விபரங்களும் திரட்டப்பட வேண்டும். இவற்றைத் திரட்டி இரண்டாம் பாகமாக எழுத முருகேசு பாக்கியநாதன் முன்வர வேண்டும். அதன்மூலம் ஈழத்தின் முன்னோடிப் பாடசாலைகளின் முழுமையான வரலாறு எழுதப்பட வேண்டும்.