திரிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வரலாறு 1

125ஆவது ஆண்டு நிறைவு மலரை முன்வைத்துச் சில குறிப்புகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனது 125ஆவது நிறைவு விழாவினை 2015 ஆம் ஆண்டில் கொண்டாடியிருந்தது. நான் அப்பாடசாலையின் பழைய மாணவன். கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது அக்கல்லூரியின் மாணவனாக இருந்தவன். குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்ற அந்த விழாவினை மேடைக்கு முன்னே அருகாமையில் நிலத்தில் அமர்ந்திருந்து பார்த்ததாக நினைவு. நூற்றாண்டு மலரின் வாசனை கூடப் பசுமையாக மனதில் நிற்கிறது. வழவழப்பான தாளில் நான்கு நிறத்தில் அச்சிடும்போது வரும் ஒருவகை இரசாயன வாசனை.

ஒரு பழைய மாணவனாக 125ஆவது ஆண்டுவிழாத் தொடர்பான எதிர்பார்ப்புகள் இருந்தன. குறிப்பாக நான் ஓர் ஆவணக்காரன் என்ற வகையில் விழா மலர் தொடர்பான பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த விழாமலரின் பக்கமொன்று கிழிக்கப்பட்டுத் தெருவெங்கும் வீசப்பட்டிருந்த படங்களுடன் அது தொடர்பான செய்திகளையும் அட்டைப்படத்தினையும் முதன்முதலில் இணையச் செய்தித் தளங்களில் கண்டேன். விழாமலரை எனக்கு அனுப்பிய நண்பரிடம் கிழிக்கப்படாத மலரை அனுப்பச் சொல்லியிருந்தேன்.

விழாமலர் கிடைத்தபோது பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அடைந்தேன். 125 ஆண்டுகளைக் கண்ட, அதிலும் தமிழர் தலைநிமிர் கழகமாகத் தன்னை முன்வைக்கும் ஒரு நிறுவனத்தின் வரலாற்றுப் பதிவான மலரானது மலர்க்குழுவோ மலராசிரியரோ இல்லாமல் வெளிவர முடியும் என்று அதற்குமுன் நான் கற்பனையிலும் நினைத்ததில்லை. அதாவது அம்மலரின் உள்ளடக்கத்துக்குப் பொறுப்புக்கூற எவரும் இல்லை.

எதுவித வரலாற்றுணர்வும் இல்லாமல் வெறுமனே ஆக்கங்களின் தொகுப்பாக அம்மலர் அமைந்திருந்தது. அது எப்போது வெளிவந்ததென்ற குறிப்புக் கூட இல்லை. ஆக்கத் தொகுப்பாக அமைந்திருந்தாலும் கூட எவற்றைச் சேர்க்க வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற பொதுப்புத்தி கூடப் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. ஒரு கல்லூரிச் சஞ்சிகைக்கும் 125ஆவது ஆண்டுமலருக்குமான வித்தியாசம் கூடத் தெரியவில்லை.

கல்லூரி வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய பல்வேறு தகவல்கள் சேர்க்கப்படவில்லை. கல்லூரி வரலாற்றுடன் எவ்விதத்திலும் தொடர்புடைய பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. கல்லூரி வரலாறு திரிக்கப்பட்டிருந்தது. கல்லூரியின் அடையாளங்கள் சிதைக்கப்பட்டிருந்தன.

குறித்த விழா மலரைக் குறித்து யாரேனும் விமர்சனம் எழுதி ஒட்டுமொத்த மலரையும் கிழித்துத் தோரணம் கட்டுவார்கள் என்று பார்த்தால் இதுவரை எதனையும் காண முடியவில்லை. அதேவேளை திரிக்கப்பட்ட அடையாளங்கள் கல்லூரியின் நிரந்தர அடையாளங்களாக மாறி வருகின்றன.

இது தகவல் யுகம் என்று கூறப்பட்டாலும் மென்மேலும் வரலாறு திரிக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வரலாறு என்பது வெறுமனே அக்கல்லூரியின் வரலாறு அல்ல. அது ஒரு சமூகத்தின் வரலாற்றின் ஒரு பகுதி; ஓர் இனத்தின் வரலாற்றிலும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அது திரிக்கப்பட்டுத் தொடரக்கூடாது.

125ஆவது ஆண்டு மலர் பற்றி எதுவித எதிர்வினைகளும் பதிவுசெய்யப்படாதுவிடின் 150 ஆவது ஆண்டில் வரலாறு இன்னுமின்னும் திரிக்கப்பட்டு விடும். அவ்வகையில் இப்பதிவினை எழுதுகிறேன். மலராசிரியரோ மலர்க்குழுவோ இல்லாமல் வெளிவந்த மலர் என்பதால் இப்பதிவு தனிப்பட எவர் மீதான விமர்சனமும் அல்ல. ஒட்டுமொத்த இந்துக் கல்லூரிச் சமூகத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு உள்ளது. அதாவது வரலாற்றுணர்வுடன் தமது செயற்பாடுகளை இனியாவது அவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

அருண்மொழிவர்மன் குறிப்பிட்டது போல ”வரலாறு முக்கியம் என்பது வெறும் வடிவேல் திரைப்பட நகைச்சுவை மாத்திரம் அல்ல நண்பர்களே!”

(வரலாறு தொடரும்)